A+ A-

ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான எம்.எல். லாபிர் காலமானார்

 

- ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆழ்ந்த அனுதாபம்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான சகோதரர் எம்.எல். லாபிர் அவர்கள் நேற்று (22.08.2021) தனது 72 ஆவது வயதில் காலமானார், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதையடுத்து மாவனல்லையில் குடியேறி வாழ்ந்து வந்தார் சகோதரர் லாபிர். யுத்தம் முடிவுற்ற பின்னர் மீண்டும் தனது சொந்த மண்ணுக்குத் திரும்பிய அவர், பல்வேறு சமூகப் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக, யாழ் மாவட்டத்தையும் தெற்கிலிருக்கின்ற முஸ்லிம் சிவில் அமைப்புகளையும் ஒன்றிணைக்கின்ற பணியில் கணிசமானளவு பங்காற்றினார்.

ஒளி” எனும் சஞ்சிகையின் மூலம் ஊடகத் துறையில் பிரவேசித்த இவர், வீரகேசரி, தமிழ் மிரர், மெட்ரோநியூஸ், விடிவெள்ளி, நவமணி ஆகிய பத்திரிகைகளின் செய்தியாளராக சிறப்பாக சேவையாற்றினார். அவரது ஊடகப் பணிகளை யாழ் அரசாங்க அதிபர் பணிமனை பாராட்டி கௌரவித்திருக்கிறுது. கலாபூஷணம், தேசகீர்த்தி, தேசசக்தி, ஊடகச்சுடர், நிழல்படத் தாரகை முதலான கௌரவங்களையும் அவர் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப் பணிகளுக்கு அப்பால் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை… என பல முஸ்லிம் அமைப்புகள், கட்சிகள், சங்கங்களில் யாழ் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அங்கத்துவம் பெற்றிருந்த அவர் இறுதி வரை உற்சாகமாகவும் சுறுசுறுப்புடனும் செயலாற்றி வந்தார். அரசியல், சிவில் சமூகத் தலைவர்களுடன் இணைந்து தமிழ்- முஸ்லிம் நல்லுறவைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கும் தன்னாலான பங்களிப்பை நல்கி வந்தமை கோடிட்டுக்காட்டத்தக்கது.

அவரது மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிக்கிறது. அவரது மறுமை வாழ்வு வெற்றி பெற பிரார்த்திக்கிறது.

 வல்ல இறைவன் அவரது பாவங்களை மன்னித்து அவரது அத்தனை நற்கருமங்களையும் ஏற்று அங்கீகரித்து உயர்ந்த சுவனபதியை வழங்குமாறும் அவரது பிரிவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு அழகிய பொறுமையை நல்கவும் பிரார்த்திப்போமாக!

 நன்றி

 என். எம். அமீன்                                                                                                                 தலைவர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்                                                   23.08.2021