A+ A-

ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது அவசியம் - முஸ்லிம் மீடியா போரம் வேண்டுகோள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (21.04.2019) கொழும்பு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் மூன்று கத்தோலிக்க  தேவலாயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களை  ஸ்ரீ லங்கா முஸ்லிம்  மீடியா போரம் மிக வன்மையாக கண்டிக்கின்றது.

நாட்டு மக்கள் அனைவரையும் பேரதிர்ச்சியிலும் பெரும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ள இந்த கொடூரமான தாக்குதல்களில் சிக்கி உயிர்களை இழந்த, படுகாயமடைந்த சகோதரர்களின் உறவுகளுக்கும் கத்தோலிக்க சமூகத்தினருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

நாட்டில் 30 வருட காலமாக புரையோடிப் போயிருந்த உள்நாட்டு யுத்தத்தினால் எமது தாய்நாடு இழந்த உயிர்களும் அழிந்த உடைமைகளும் ஏராளம். இனியும் அப்படியொரு நிலை இந்த நாட்டில் ஏற்பட்டு விடக் கூடாது. யுத்தம் முடிவுக்கு கொண்டு வர்ப்பட்டதையடுத்து சகவாழ்வு, மத நல்லிணக்கம் தொடர்பில் சகல இனங்களும் கூடுதல் கரிசனை செலுத்தி வருகின்ற இவ்வேளையில் இந்த கொடூரமான தாக்குதல்கள் நாட்டை அழிவுக்கே இட்டுச் செல்லும். எனவே, இந்தத் தாக்குதல்களை மேற்கொண்ட, இதற்குத் துணைபோன குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உச்சபட்ச தண்டனையை வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் வலியுறுத்துகிறது.

இந்த தாக்குதல்களில் சில முஸ்லிம் பெயர் தாங்கி இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்ற இவ்வேளையில், குறிப்பாக முஸ்லிம் பெற்றோர் தமது பிள்ளைகள் விடயத்தில் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும். நவீன யுகத்தில் அவர்கள் யாருடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள், எங்கு செல்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணிக்க கடமைப்பட்டுள்ளனர். தீவிரவாத சிந்தனையின்பால் இளைஞர்கள் கவரப்படுவதிலிருந்து அவர்களைத் தடுத்து நிறுத்துவது முஸ்லிம் சிவில் சமூகத்தின் பொறுப்பாகும்.

அதேவேளை இந்த நெருக்கடிமிக்க நிலையில் அநேக ஊடகங்கள் பொறுப்புணர்வுடன், ஊடக தர்மங்களைப் பேணி சிறப்பாக நடந்து கொண்டதையிட்டு முஸ்லிம் மீடியா போரம் பாராட்டுகிறது. அதேவேளை, ஒரு சில ஊடகங்கள் ஊடக தர்மங்களுக்குப் புறம்பாக நடந்து கொண்டதையிட்டு கவலையடைகிறது. ஏதாவது ஓர் அசம்பாவிதம் நடந்து விட்டால் அல்லது யாராவது ஒருவர் கைது செய்யப்பட்டு விட்டால், அவரது இன மற்றும் மத அடையாளங்களுடன், அவசர அவசரமாக செய்தி வெளியிடும் ஊடகங்கள், குறித்த நபர் விடுதலை செய்யப்பட்டு விட்டால் அது பற்றி செய்தி வெளியிடுவதில் அக்கறை காட்டுவதில்லை. இதனால் மக்கள் பிழையாக வழிநடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதை புரிந்து கொள்ளவேண்டும். எனவே, இது விடயத்தில் ஊடகங்கள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் வேண்டுகோள் விடுக்கிறது.


என்.எம். அமீன்
தலைவர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்
25.04.2019