A+ A-

பிரதேச ஊடகவியலாளர் அறூஸ் மீதான தாக்குதலுக்கு முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

அட்டாளைச்சேனை பிரதேச ஊடகவியலாளரான எஸ். எம். அறூஸ் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் தமீம் ஆப்தீன் என்பவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாக கண்டிக்கிறது.

சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அமர்வு தொடர்பாக ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸினால் எழுதப்பட்ட செய்திகள் நேற்றைய தினம் (11.04.2018) ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இது தொடர்பில் ஆத்திரமுட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் தமீம் ஆப்தீன் ஊடகவியலாளர் அறூஸூக்கு தொலைப்பேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ள அதேசமயம் அவரது நண்பரது வீட்டில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியாசலையில் அனுமிக்கப்பட்ட ஊடகவியலாளர் அறூஸ் சிகிச்சை பெற்ற பின்னர் நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார்.

நிகழ்வுகளை உரிய முறையில் அறிக்கையிடுவதும் உண்மையை மக்கள் மத்தியில் கொண்டுச் செல்வதும் ஊடகவியலாளர் ஒருவது பிரதான கடமையாகும். அந்த அடிப்படையில் தனது கடமையை நிறைவேற்ற முற்பட்ட ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்துவதை ஊடக அமைப்பு என்ற வகையில் எம்மால் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

எனவே, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க தாக்குதல் நடத்திய பிரதேச சபை உறுப்பினர் அங்கம் வகிக்கும் கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைபீடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கேட்டுக்கொள்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.