A+ A-

முஸ்லிம் மீடியா போரத்தின் 59வது ஊடக செயலமர்வு கல்-எளியவில்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் நாடு தழுவிய ரீதியில் பாடசாலைகள் மற்றும் அரபுக் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வரும் மாணவர்களுக்கான ஊடகச் செயலமர்வின் 59வது செயலமர்வு நாளை  31ஆம் திகதி சனிக்கிழமை (31.03.2018) கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக்கல்லூரியில் நடைபெறவுள்ளது.

“21ஆம் நூற்றாண்டில் ஊடகம்” எனும் தொனிப் பொருளில் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என். எம். அமீன் தலைமையில் இந்தச் செயலமர்வு நடைபெறவுள்ளது.

காலை 9 மணி தொடக்கம் மாலை வரை முழுநாளும் இரண்டு அமர்வுகளாக இடம்பெறும் இந்த செயலமர்வில் கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியில் க.பொ. த சாதாரண மற்றும் உயர் தரத்தில் கல்விகற்றும் சுமார் 300 மாணவர்களும் 50 ஆசிரியர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இந்த அமர்வுகளில் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன், தர்ஹா நகர் கல்வியியல் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதி கலைவாதி கலீல், விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் எம். பி. எம். பைரூஸ், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சிரேஷ்ட அறிவிப்பாளரும் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான ஜுனைத் எம். ஹாரிஸ், நகர திட்டமிடல்
மற்றும் நீர்வழங்கள் அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் ஏ. ஹில்மி முஹம்மத், ஊடகவியலாளர் ஜாவிட் முனவ்வர் மற்றும் ஊடகவியலாளர் பிரோஸ் முஹம்மட் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.

பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான சர்வதேச கலாச்சார நிலையத்தின் பணிப்பாளர் மௌலவி எஸ். எம். நௌபர் விஷேட உரை நிகழ்த்தவுள்ளதுடன் லேக்ஹவுஸ் தமிழ் வெளியீடுகளுக்கான ஆலோசகர் எம். ஏ. எம். நிலாம், போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான், தேசிய அமைப்பாளர் எம். இஸட். அஹ்மத் முனவ்வர், சிரேஷ்ட ஊடகவியலாளர்களான திருமதி புர்கான் பீ இப்திகார், திருமதி ஸமீஹா ஸபீர் ஆகியோர் அமர்வுகளுக்கு தலைமை வகிக்கவுள்ளனர்.

சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் முகாமைத்துவ சபை தலைவர் அல்ஹாஜ் எஸ். ஏ. சி. எம். சுபைர், கல்லூரி அதிபர் திருமதி பரீதா முஸம்மில், சட்டத்தரணி சல்மான் ரியாழ் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.