அரசாங்க தகவல் திணைக்களத்தின் அடையாள அட்டை இல்லாத ஊடகவியலாளர்களுக்கு அவர்களின் சேவைக் காலத்தினை கருத்திற்கொண்டு தீர்வையற்ற மோட்டார் சைக்கிள்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஊடக அமைச்சிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "நீண்ட காலம் ஊடகவியலாளர்களாக செயற்படும் பலருக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தின் அடையாள அட்டை வழங்ப்படாதுள்ளது. அத்துடன் ஊடக நிறுவனங்களில் கடமையாற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையானோருக்கு மாத்திரமே அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் ஊடகவியலாளர் தீர்வையற்ற மோட்டார் சைக்கிளினை பெறுவதற்கு அரசாங்க தகவல் திணைக்களத்தின் அடையாள அட்டையை கட்டாயப்படுத்துவதன் மூலம் அவர்கள் பெற முடியாது போகலாம். எனவே, சேவைக்கால சான்றிதழை மாத்திரம் தகைமையாக கருதி ஊடகவியலாளர்களுக்கு தீர்வையற்ற மோட்டார் சைக்கிளினை வழங்குமாறு ஊடக அமைச்சிடம் முஸ்லிம் மீடியா போரம் வேண்டுகோள் விடுத்துள்ளது.